மொட்டை போடாவிட்டால் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு

மொட்டை போடாவிட்டால் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு

வாட்ஸ்அப்-பில் வந்த செய்தி அப்படியே.

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கான உண்மையான காரணம் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

கடல் நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர்


இனி சில கேள்விகள்

\\ முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

இந்த மிகபெரிய ரகசியத்தை எப்படி இப்போது கண்டு பிடித்தார்கள்?

வியப்பானது…
முறையாக சொன்னால் தான் பின்பற்றுவார்கள். முறையாக சொல்லாவிட்டால் பின்பற்ற மாட்டார்கள் என்பது தான் சரியாக இருக்கும்.

முன்னோர்கள் சரியாக செய்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு கூறப்படும் காரணம் எதன் அடிப்படையில் இருக்கிறது என்பதே கேள்வி.

\\ கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.\\

கருவறையில் சிறுநீர், மலம், இரத்தம் இருக்காது. குழந்தைக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் பொதுவாக கருவறையில் இருக்காது.

\\ வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர். \\

முதலில் எந்த கழிவும் உடலில் சேர்வதில்லை. அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி எளிதில் வெளியே வருகிறது?

எல்லா இடங்களிலும் உள்ள கழிவுகள் எளிதில் வெளியேறும் போது எப்படி தலையில் உள்ள கழிவு மட்டும் தங்கிவிடுகிறது?

\\ மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். \\

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அறிவியலின்படியோ அல்லது மொட்டை போடாதா குழந்தைகளுக்கு நோய்கள் வந்ததாகவே ஆதாரம் இருக்கிறதா?

\\ நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். \\

உண்மை காரணத்தை சொன்னால் அனைவரும் பின்பற்றுவார்கள். ஏன் பின்பற்ற மாட்டார்கள்?

\\ மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான். \\

ஏன் மூன்று வயது வரை காத்திருக்க வேண்டும்? இரண்டாவது வயதிலோ அல்லது ஐந்தாவது வயதிலோ அல்லது முதல் மொட்டை அடித்து முடி வளர்ந்த உடனேயோ ஏன் இரண்டாவது மொட்டை அடிப்பதில்லை.

\\ ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர் \\

ஆன்மீகரீதியாக உண்மைக்கு புறம்பானதை சொல்லி பயமுறுத்தி ஒன்று செய்ய வைப்பதை மரியாதைக்காக செய்கிறார்கள் என்பது சரியல்ல.


மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாகவும், கெட்டியாகவும், அதிக அளவிலும் வளரும். இதை உலகத்திலுள்ள எல்லா மக்கள் கூட்டத்தினரும் விரும்புகின்றனர். அவ்வளவே… இதற்கு உண்மைக்கு புறப்பான செய்திகளை கலந்து ஆன்மீகம் என்ற பெயரிலும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள்.

ஆன்மீகத்தை இதில் நுழைக்கும் போது தான் கோவில், பூசாரி, பழம், தேங்காய், துணிகள், பூசை, தேவையற்ற பல பழக்க வழங்கள் என எளிய மக்களை கொள்ளை அடிக்க இயலும்.

குழந்தைக்கு எப்போதும் வேண்டுமானாலும் முடிதிருத்தும் கடைக்கு அழைத்து சென்று பாதுகாப்பான முறையில் மொட்டை அடித்து சுகாதாரமாகவும், அழகாகவும் பராமரிக்கலாம்.